பொய் கூறுவதில் ஜனாதிபதி அநுர வல்லவர்!” – அரசின் வரவு செலவுத் திட்டத்தையும் விமர்சித்த நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பொய் கூறுவதில் ஜனாதிபதி மிகவும் வல்லவர் எனக் குறிப்பிட்ட அவர், விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களால் நிறைந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகள், வரி அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவர் விமர்சித்தார்.
மேலும், நாட்டில் முதலீடுகள் அதிகரிப்பதாக அரசாங்கம் கூறினாலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பொலிஸ் துறையின் அரசியல்மயமாக்கல், இளைஞர்கள் மீதான பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சூழலில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் எத்தனை பொய்கள் இடம்பெறப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.